மளிகை பொருட்கள் கடும் விலை உயர்வு-எங்கே போய் முடியும்?
லக்கி லுக் பதிந்தது போல ஆயிரம் ருபாய் சம்பள உயர்வு கிடைத்தால் மூவாயிரம் ருபாய்க்கு கூடுதல் செலவுகள் பல வகைகளில் வருகிறது. நல்ல அரிசி (குமட்டாமல் உள்ளே போகின்ற அரிசி) 38 ருபாய் முதல் 42 ருபாய் வரை ,சர்க்கரை-24ருபாய் முதல்-27 ருபாய்வரை . காய்கறிகள் எதுவும் வாங்கும் படி இல்லை. காபித்தூள் -280ருபாய் முதல் 300 ருபாய் இந்த விலைவாசி நேரடியாக பாதித்தது ,நம் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் மிடில் கிளாஸ் மக்களைத்தான்.எங்கும் குடிநீர் வராததால் எல்லோரும் 25 ரூபாய் முதல் 40 ருபாய் வரை விற்கும் தண்ணீர் கேன் களையே வாங்குகின்றனர்.(அதன் தரம் தரித்திரம் )இதற்க்கு தனி பதிவு போடுவேன். அதுவும் இந்த 5000 முதல் 10000 வரை சம்பளம் வாங்கும் மக்கள் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளாய் தவிக்கும் நிலை மிகவும் பரிதாபம், நான் மேல்தட்டு மக்களை பற்றியோ ,கீழ்த்தட்டு மக்களை பற்றியோ பேசவரவில்லை. முதலாமவருக்கு விளைவாசியை பற்றி கவலை இல்லை இரண்டாமாமவர் அன்றாடம் காய்ச்சிகள் அன்று உழைத்தால் மட்டுமே அன்று உண்ண முடியும் . அய்யா மாபெரும் அரச எந்திரங்களே ஆன்லைன் வர்த்தகத்தை அறவே ஒழியுங்கள் ,உங்களுக்கு சேவை வரி கிடைக்கிறது என்று பஞ்ச மகா பாதகத்தை செய்யாதீர்கள்.யாரையும் சோற்றுக்கு லாட்டரி அடிக்க விடாதீர்கள்.பட்டினிச்சாவுகள் இனி வேண்டாம். (நீங்கள் தரும் இலவசங்கள் பெரும்பாலும் அதற்க்கு தகுதியானவருக்கு போவதில்லை. மாறாக விலை பொருட்களாக பல சமயம் மாறிவிடும் அபாயமும் உண்டு) பாத்திரம் அறிந்து பிச்சை போடுங்கள்.கனவான்களே... அரிசி, பருப்பு, எண்ணெய், எல்லா விலையும் உயர்வு தான் : விழிபிதுங்கி மக்கள் தவிப்பு |
மே 28,2009,00:17 |
செய்தி நன்றி:-தினமலர் |
பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மளிகைப் பொருட்களில் புளி, தனியாவைத் தவிர மற்ற அனைத்துபொருட்களும் விலைஏற்றத்தை சந்தித்துள்ளன. சமீப காலமாக தமிழகத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைவு, தமிழகத்தில் விளைச்சல் குறைவு போன்ற காரணங்களால் 19 ரூபாய்க்கு விற்று வந்த அரிசி கூட 34 லிருந்து 38 ரூபாய் வரையில் விற்கப்பட்டு வருகிறது. அரிசி விலை அதிகரிக்கப்படவில்லை என்று மில் உரிமையாளர்களும், அரசும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டாலும், அரிசி விலையில் சரிவு ஏதும் ஏற்படவில்லை. தற்போது, சராசரியாக 30 ரூபாய்க்கு அதிகமான விலை கொடுத்தே அரிசியை வாங்கி பொதுமக்கள் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். அரிசி தான் பிரதான உணவு என்றாலும், குழம்பு, ரசம், பொரியல் போன்ற ' சைடு டிஷ்' கள் உருவாக்க தேவையான காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களின் விலையும் கடந்த ஓராண்டாக கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தவிலை உயர்வு நடுத்தர மக்களை விரக்தியின் விளிம்பிற்கு செல்ல வைத்துள்ளது. மளிகைப் பொருட்களை பொறுத்தவரையில் புளி மற்றும் தனியா ஆகிய இரண்டின் விலை மட்டுமே அதிகப்படியான வரத்தின் காரணமாக குறைந்துள்ளது. மற்ற பொருட்களின் விலையில் ஏற்றமே காணப்படுகிறது. சென்னைக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்துதான் புளி வருகிறது. இந்தாண்டில் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் புளி அதிகளவு விளைந்துள்ளது. இதனால், கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஒரு கிலோ 65 முதல் 70 ரூபாய் வரையில் விற்கப்பட்டு வந்த புளி தற்போது ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பழைய புளி அதாவது கடந்தாண்டில் விளைந்த புளி ஒரு கிலோ 40 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக தற்போது விற்கப்படுகிறது. தனியா தமிழகத்தில் முன்பு விளைவிக்கப்படுவதில்லை. ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களிலிருந்து மட்டுமே தருவிக்கப்பட்டது. இதனால், விலை குறையாமல் அப்படியே இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் விருதுநகர், சாத்தூர், சங்கரன்கோவில், கோவில்பட்டி மற்றும் நெல்லை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தனியா பயிரிடப்பட்டு, இந்தாண்டில் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனியா விலை தற்போது குறைந்துள்ளது. ஒரு கிலோ தனியா 65 லிருந்து 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 55 ரூபாயாக குறைந்துள்ளது. இந்தாண்டில் குண்டு மிளகாய் விளைச்சல் அதிகரித்துள்ளது. தமிழகம், ஆந்திராவில் புதிய மிளகாய் வரும்பட்சத்தில் விலைஅதிகளவு குறையும். இந்த வகையில் தற்போது கடந்த மாதம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட குண்டு ரகம், 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இரண்டாம் ரகம் 90 ரூபாயிலிருந்து 100 ரூபாய் முதல் 110 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. ஆந்திராவிலிருந்து வரும் நீளமான மிளகாய் ரகத்தின் விலை ஒரு கிலோ 50 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களில் மருத்துவ குணத்தை கொண்ட பூண்டு கிலோ ரூ25 வரை குறைந்த நிலை மாறி தற்போது கிலோ 55 ரூபாய்க்கும், சிறிய பூண்டு 15 ரூபாயிலிருந்து 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது. துவரம் பருப்பு முதல் ரகம் கிலோ 58 ரூபாயிலிருந்து 62 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. இரண்டாம் ரகம் 45 ரூபாயிலிருந்து 53 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. கடந்த மாதம் 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒருகிலோ உளுந்து தற்போது 53 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பர்மாவிலிருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் உளுந்து கடந்தமாதம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 52 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், தற்போது ரேஷன் கடைகளில் பருப்பு விற்பனை அதிகரித்துள்ளதால் மளிகை கடையில் பருப்பு விற்பனை மந்தமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் 50 ரூபாய்க்கு மேல் கொள்முதல் செய்யும் பருப்பு வகைகளை குறைந்த விலையில் ரேஷன் கடைகளில் அரசு விற்பனை செய்து வருகிறது. மேலும், வெல்லம் மற்றும் சர்க்கரை விலையும் தற்போது உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெல்லம் கடந்த மாதம் 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 30 முதல் 32 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. சர்க்கரையை பொறுத்தவரையில் தற்போது ஆன்லைன் வர்த்தகத்திலிருந்து மத்திய அரசு விலக்களித்துள்ளது. பதுக்கலை தடுப்பதும், விலை உயர்வை கட்டுப்படுத்துவதுமே இதில் மத்திய அரசிற்குள்ள நோக்கம். தமிழகத்திற்கு இந்தாண்டு மத்திய அரசு 16.5 லட்சம் டன் சர்க்கரை ஒதுக்கியுள்ளது. ரேஷனிலும் வினியோகிக்கப்படுவதால், அத்யாவசியப் பொருட்களில் ஒன்றாகவும் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒட்டு மொத்தமாக கரும்பு உற்பத்தியில் ஒரு கோடி டன் அளவிற்கு குறைந்துள்ளதால் இம்மாதம் சர்க்கரை விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்குமுன்னர் 22 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை 24 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சர்க்கரை ஒரு கிலோ 27 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மைதா, ரவை மற்றும் கோதுமை விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் ஒருகிலோ 19 ரூபாய்க்கு விற்கப்பட்ட மைதா இம்மாதம் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மளிகைப் பொருட்கள் விலை உயர்வு குறித்து தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் சொரூபன் கூறியதாவது: ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து தற்போது சர்க்கரை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ள அனைத்து உணவுப்பொருட்களையும் எடுக்க வேண்டும். சேவை வரி கிடைப்பதாக மத்திய நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் ஏற்கனவே தெரிவித்திருந்தார். சேவை வரி கிடைக்கிறது என்பதற்காக பதுக்கலையும், கடும் விலை உயர்வையும் ஊக்குவிக்க வேண்டாம். விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சொரூபன் கூறினார்.
-நமது சிறப்பு நிருபர்- |
Labels: மளிகை பொருட்கள் கடும் விலை உயர்வு-எங்கே போய் முடியும்?
0 Comments:
Post a Comment
வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.
Subscribe to Post Comments [Atom]
<< Home